 |
- Matrimonial
- Tamil Class
- Kannada Class
- Yoga Class
- Karate Class
|
| Read more. |
 |
- Activities for Ladies
- Beauti Tips
- Health Tips
- Recipes
- Share Knowledge
|
| Read more. |
 |
- Rymes
- Quiz
- General Knowledge
- Child Recipes
- Painting-Drawing
|
| Read more. |
|
|
பெங்க்ளூர்த் தமிழ்ச் சங்கம் வரலாற்றுக் குறிப்புகள்
தமிழகத்திற்கப்பால், தமிழ்கூறு நல்லுலகில் வாழும் தமிழர்கள் தங்கள் தாய்மொழியாம் தமிழைப் பேணிடவும் தம் பண்பாட்டைக் காத்திடவும் சங்கங்களை அமைத்து நற்பணியாற்றி வருகின்றனர். இந்திய நாட்டில் கருநாடக மாநிலத்தின் தலைநகராம் பெங்களூரில் தமிழ் - தமிழர் நலப்பணியாற்றி வரும் சீரிய அமைப்பே “பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்”
07/01/1950 இல் பேராசிரியர் தண்.கி. வேங்கடாசலனார், புலவர் க.சுப்பிரமணியனார், புலவர் மா. சிவசங்கரனார், திரு தி.ச. ஆறுமுகனார், மருத்துவர் த. இராமன் அவர்கள், திரு அ.கிருட்டினமூர்த்தியார், திரு வே கோவிந்தராசனார் ஆகியோர் தமிழ் இலக்கியங்களைக் கற்கும் ஆர்வமுடன் தொடங்கிய அமைப்பே இன்று தமிழுலகம் போற்றும் வகையில் செயலாற்றிவரும் “பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்” ஆகும். இலக்கிய ஆர்வலர் குழுவுடன் படிப்படியாக உறுப்பினர்கள் சேரத் தொடங்கியபின்னர் விதிமுறைகள் அமைக்கப்பெற்று 30/12/1966 இல் முதற் செயற்குழு அமைக்கப்பெற்றது. 30/12/1966 இல் முறைப்படி பதிவுசெய்யப்பெற்றது.
வாடகை இடத்தில் இருந்து கொண்டு பல்வேறு வகையான இலக்கியப் பணிகளையாற்றி வந்த சங்கத்திற்குச் சொந்தமாகக் கட்டடம் இருந்தால் பணிகளை விரிவாக்கி நற்பணி ஆற்ற இயலும் என்னும் எண்ணம் வலிமை பெற்ற நாளில் தற்போது சங்கம் உள்ள இடம் வாங்கப்பெற்று 1967 இல் கட்டடப் பணி தொடங்கியது. 30/09/1967 அன்று சங்கக் கட்டடத்திற்கு, தமிழ்நாட்டின் அன்றைய கல்வியமைச்சர் மாண்புமிகு நாவலர் இரா.நெடுஞ்செழியனார் தலைமையில் அன்றைய கருநாடக முதல்வர் மாண்புமிகு எஸ். நிஜலிங்கப்பா அவர்கள் அடிக்கல் நட்டினார்கள். 03/04/1970 - சங்கக் கட்டடத் திறப்பு விழா, முனைவர் மு.வரதராசனார் தலைமையில் அன்றைய கருநாடக முதல்வர் மாண்புமிகு வீரேந்திர பாட்டீல் அவர்கள் திறந்து வைத்தார்கள். 04/03/1974 அன்று முதன்மாடிக் கட்டடப் பணியினைத் தொழிலதிபர் திரு நீலகண்டம்பிள்ளை தொடங்கி வைத்தார். 27/05/1974 அன்று முதன்மாடி அடிக்கல்லைத் தமிழ்நாட்டின் அன்றைய முதல்வர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நாட்டினார்கள். 1985 இல் இரண்டாம் மாடிக் கட்டடப்பணி, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதனார், பம்பாய் தமிழர் பேரவைத் தலைவர் வரதராசனார் முன்னிலையில் தொடங்கப்பெற்றது. 04.03.1988 அன்று சன்ரைஸ் சி.அருணாசலனார் தலைமையில் முத்தமிழ்க் காவலரும் திரு எஸ். நிஜலிங்கப்பா அவர்களும் வாழ்த்துரை வழங்க தவத்திரு குறக்குடி அடிகளார் இரண்டாம் மாடிக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்கள்.
தமிழ்ச் சங்கக் கட்டடப் பணிகளுக்கென, தமிழக அரசின் வழி, மாண்புமிகு பக்தவத்சலனார் முதல்வராக இருந்தபோது உரூ 50,000/-மும் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது உரூ 25,000/-மும் கருநாடக அரசின் வழி மாண்புமிகு எஸ் நிஜலிங்கப்பா அவர்கள் முதல்வராக இருந்தபோது உரூ 50,000/- மும், நடுவண் அரசின் வழி மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார் தலைமை அமைச்சராக இருந்தபோது உரூ 50,000/-மும் நன்கொடையாக வழங்கப்பெற்றன. முதன்மாடிக் கட்டடப் பணி நடைபெற்று வந்தபோது அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் தம் பிறந்தநாளை முன்னிட்டு அன்பர்களால் அளிக்கப்பெற்ற ஊனமுற்றோர் நல்வாழ்வு நிதியிலிருந்து உரூ 50,000/- வழங்கினார்கள். அதுவன்றி, தலைக்கு உரு ஒன்று முதல் பல்லாயிரம் வரை நன்கடைகள் அளித்தவர்கள் பலர்; அளிதுக் கொண்டு வருபவர்களும் பலர். சங்கத்தின்பால் அன்பும் பரிவும் நாட்டமும் கொண்டு கொடையளிப்பவர்களின் நன்கொடைகளே சங்கத்தின் இன்ரைய வளர்ச்சி எனில் மிகையன்று.
தமிழ் கலை பண்பாடு ஆகியவற்றை வளர்த்தல், தமிழர் கன்னடர் உறவை மேம்படுத்தல் ஆகியவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டு சாதி, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சங்கம் இயங்கி வருகிறது. பின்னாளில், கருநாடகத்தில் மொழிச் சிறுபான்மையராக வாழும் தமிழர்கள் தம் உரிமைகளை இழந்து வரும் நிலையில் தமிழர் நலனையும் பேணும் இயக்கமாக இயங்கி வருகின்றது.
அனைவரும் பயனடையும் வகையில் பல்வேறு வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
தமிழ், கன்னடம், நாட்டியம், இசை, யோகா, கராத்தே, கருவி இசை, ஏரோபிக், கைவினைக்கலை, ஓமியோபதி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்ட காமராசர் உயர்நிலைப் பள்ளியும், திங்கள் தோறும் உறுப்பினர்களுக்கு இலவயமாக அனுப்பபெற்றுவரும் “ஊற்று” திங்களிதழும், தமிழ்க் காவலர் கலைஞர் கருணாநிதி கூடத்தில் இயங்கிவரும் 40,000க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட சர்வக்ஞர் நூலகமும், தமிழுக்கும் தமிழினத்துக்கும் உழைத்த பெருமக்களை நினைவுகூரும் வகையிலும் காமராசர் பள்ளி மாணாக்கர் பயனுறும் வகையிலும் அமைக்கப்பெற்றுள்ள அறக்கட்டளைகளும் சங்கத்தின் சிறப்புகளாம்.
ஆண்டு தோறும் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், இலக்கிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறப்பு மலர்களும், தொகுப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறன. சங்க உறுப்பினர்களும் பிறரும் தம் திறமையை வெளிப்படுத்தும் வகையில், திங்கள் தோறும் “வாசகர் வட்டம்”, ஏரிக்கரைப் பாட்டரங்கம்” நடத்தப்பெறுகின்றன. சங்க நிகழ்ச்சிகளுக்குத் தமிழகத்திலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பல்துறைச் சான்றோர் பலர் வருகை புரிந்துள்ளனர்.
ஆண்டு தோறும் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன், காமராசர் போட்டிகள் மாணாக்கர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப்பட்டு வருகின்றன. பாவலர்களுக்கு. “பொற்கிழிப் பாவலர்” போட்டியும் நாடகக் கலையை ஊக்குவிக்கும் வகையில் நாடகப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
வருங்காலப் பிறங்கடையினர் அறிந்து கொள்ளும் வகையில் சங்க நூலகத்திலும் இரண்டாம் மாடியில் உள்ள தொல்காப்பியர் மாடத்திலும் கட்டிடத்திலும் சான்றோர்கள் பலருடைய வண்ணப்படங்கள் வைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு, பெங்களுர்த் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பணியுடன் தமிழர் நலப்பணி, தமிழ்க் கல்விப்பணியையும் மேற்கொண்டு, தமிழரல்லாதாரும் பயன்படத்தக்க வகையில் பிற துறைகளிலும் சிறப்புறப் பணியாற்றி எடுத்துக்காட்டாக விளங்குகிறது. |